மட்டக்களப்பில் இரண்டு கோடி செலவில் பள்ளிவாசல்



சவுதி அரேபிய நிதி உதவியுடன் மட்டக்களப்பு, காங்கேயனோடை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல், மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில், குறித்த காங்கேயனோடை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் சவுதி அரேபியாவின் சுமார் இரண்டு கோடி ரூபா நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில், சவுதி அரேபிய நாட்டு பிரமுகர்களான பொறியியலாளர் அஸ்ஸெய்ஹ் அப்துல் அஸீஸ் பின் ஹுஸைன் அல்முதவல்லீ, மற்றும் கலாநிதி அஸ்ஸெய்ஹ் உஸ்மான் பின் ஹுஸைன் அல் முதவல்லீ ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

அத்துடன், ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் செயலாளர் மௌலவி ஏ.எல்.மும்தாஸ் மதனீ, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பிராந்திய காரியாலய பொறுப்பாளர் ஏ.எல்.ஜுனைட் நழிமீ உட்பட பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.