(க.கிஷாந்தன்)
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் ரட்ணகிரி பிரதேசவாசிகள் அண்மையில் முன்னெடுத்த குடம் ஏந்திய வீதி மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களில் பௌத்த பிக்கு உட்பட 20 பேருக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.செல்வகுமாருக்கு நுவரெலியா பிரதி பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த 13.03.2016 அன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கும், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குள்ளான கிராம அதிகாரிகளுக்கும் விழிப்பூட்டும் கலந்துரையாடல் ஒன்று 13.03.2016 அன்று லிந்துலை சமர்வீவ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் பொலிஸ் அத்தியட்சகர் இந்த பணிப்பை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். செல்வகுமார் தெரிவித்ததாவது, குறித்த போராட்டம் இப்பகுதிக்கான லிந்துலை பொலிஸாருக்கும் கிராம அதிகாரிகளுக்கும் முன்அறிவித்தல் இன்றியே நடைபெற்றது. இதனால் அட்டன் நுவரெலியா பிராதான வீதியின் போக்குவரத்து சில மணி நேரங்கள் ஸ்தம்பிதமடைந்தன.
இவ்வீதியினூடான பயணித்த வெளிநாட்டவர் மற்றும் ஏனையோர் போக்குவரத்து இடையூறுக்கு ஆளாகினர். மக்களுக்கு போக்குவரத்து இடையூறு மற்றும் அசௌகரியங்களை உருவாக்கியதன் காரணமாக இவ் போராட்டத்திற்ககு தலைமை தாங்கிய பௌத்த பிக்கு உட்பட 20 பேரின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்திற்கு லிந்துலை பொலிஸார் வழக்கு அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளனர். இதன் அடிப்படையில் குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த சிட்டாரசு பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. இவ் பத்திரங்கள் குறித்த நபர்களுக்கு பொலிஸ் ஊடாக வழங்கப்பட்ட அதேவேளை எதிர்வரும் 26ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும் படி பொலிஸாரால் பணிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் செல்வகுமார் நுவரெலியா பிரதி பொலிஸ் அத்தியட்சகருக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

