அடுத்தவாரம் 250 ஏக்கர் காணியை விடுவிக்க ஏற்பாடு




-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக அடுத்தவாரம் மேலும் 250 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இது தொடர்பாக வியாழனன்று 24.03.2016 அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாதுகாப்புத் தரப்பிடம் உள்ள காணிகள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஜனாதிபதி தீர்மானிப்பார், அதுவரை வனப்பிரதேசம் தவிர்ந்த ஏனைய அரச காணிகளை இனங்கண்டு அதில் மீள்குடியேற்றம் செய்யுமாறு ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் தேவையற்ற காணிகள் இருக்குமாயின் அவற்றை இனங்கண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான குழு கேட்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் அறிக்கைக்கு அமைய தேவையற்ற காணிகள் இருக்குமாயின் அதனை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் எடுப்பார்.
ஏற்கனவே சம்பூர் மற்றும் வலிகாமம் பகுதிகளில் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றது.
இதுவரையில் மீள்குடியேற்றப்படாதவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை இவ்வருடத்துக்குள் உடனடியாக அவர்களது சொந்தக் கிராமங்களில் குடியேற்றுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
மீள்குடியேற்றம் தொடர்பில் பிரதேச செயலகங்கள் ஊடாக நாங்கள் தகவல்களைப் பெற்றுள்ளோம். அதற்கமையவே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
பிரதேச செயலகங்களில் தங்களைப் பதிவு செய்யாதவர்கள் இருந்தால் அவர்கள் நேரடியாக அமைச்சுக்கு வந்து தம்மைப் பதிவு செய்ய முடியும்.
இடம்பெயர்ந்தவர்களின் குடும்பங்கள் 3,4 குடும்பங்களாக விருத்தியடைந்திருக்கலாம். அவர்களுக்காகவும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.