சிறை செல்லத் தயார், அபராதம் கட்டமாட்டேன் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்



5 கோடி ரூபாய் அபராத தொகையை நாளை மாலை 5 மணிக்குள் 'வாழும் கலை அமைப்பு' (The Art of Living Foundation) செலுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று கெடு விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து கூறிய போதே ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
மேலும் சட்டத்திற்கு எதிராக எந்தவொரு காரியத்திலும் ஈடுபடவில்லை என்றும், ஒரு மரத்தை கூட வெட்டாத தாங்கள் எந்த காரணத்திற்காக அபராத தொகையை செலுத்த வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அத்தோடு வாழும் கலை அமைப்பினரால் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் உலகக் கலாசாரத் திருவிழாவிற்காக, யமுனை நதிக்கரையில் செய்யப்படும் கட்டுமானப்பணிகள் அனைத்தும் பிரித்தெடுக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டது என்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே பிரித்தெடுக்க கூடிய கட்டுமான வேலைகளைச் செய்ய இந்திய ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது குறித்தான சர்ச்சைகளும் ஊடகங்களில் மிகப்பெரிய விவாதப்பொருளாக உருமாறியுள்ளன.
லட்ச கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த உலகக் கலாசாரத் திருவிழாவில், மக்கள் ஆற்றை எளிதாக கடப்பதற்கு ஏதுவான தற்காலிக பாலம் ஒன்றை இந்திய ராணுவம் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கான கோரிக்கையை வாழும் கலை அமைப்பினர் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் முன்வைத்த காரணத்தால்தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதே விவகாரம் தொடர்பான கருத்துக்கள் சமுக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட சூழலில், இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இந்த சர்ச்சையை நாடாளுமன்றத்திலும் எழுப்பினார்கள்.
இந்த சூழலில் தான் சர்ச்சையை உண்டாக்கி வரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டிருந்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்க போவதில்லை என்கிற செய்தியும் வெளியாகியது. தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கூட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என செய்திகள் வெளியிடப்பட்டு வரும் போதும், அதற்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மறுப்பு வெளியிட்டு வருகிறார்.
தலைவர்கள் பங்கேற்பது தொடர்பான உறுதி தகவல்கள் மட்டுமே தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், ரத்து செய்யப்பட்டு விட்டது போன்ற தகவல்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
யமுனை நதிக்கரையில் வாழும் கலை அமைப்பினர் நடத்து திட்டமிட்டுள்ள உலகக் கலாசாரத் திருவிழாவிற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டதில், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கவலைகள் எழுந்தன.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முன்பாக நடைபெற்ற போது, இந்த நிகழ்ச்சிக்கு தடை ஏற்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வரும் வாழும் கலை அமைப்புக்கு முதற்கட்ட அபராதமாக 5 கோடி ரூபாய் விதிக்கப்பட்டது.
அந்த அபராததிற்கான காலக்கெடு இன்று மாலை வரை மட்டுமே முன்னர் வழங்கப்பட்டிருந்த சூழலில், அது நாளை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.