எழுத்தாளர் புன்னியாமீன் காலமானார்



அதிக நூல்களை எழுதி சாதனை புரிந்த பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பீ.எம். புன்னியாமீனின் 55 வயதில்  இன்று காலமானார். 
பலரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் சுமார் 170 நூல்களை தமிழ் மொழியில் எழுதி வெளியிட்டிருக்கும் புன்னியாமீன் ஒரு சிறந்த சிறுகதாசிரியரும்கூட. 160 சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர், பல நூற்றுக் கணக்கான சமூக இலக்கிய அரசியல் திறனாய்வு கல்விசார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவர் சைதா, உம்மா தம்பதியினரின் புதல்வர். இவர்,கண்டி உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி , கண்டி மடவளை மதீனா தேசியக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியான இவர், ஊடகவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
மாணவப் பருவத்திலிருந்தே வாசிப்புத்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வந்த இவரின் சுய ஆக்கமான முதல் உருவகக் கதை ‘அரியணை ஏறிய அரசமரம்’ எனும் தலைப்பில் 1978 ஜுலை 02ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது.
அதிலிருந்து இதுவரை 162 சிறுகதைகளையும், 5000க்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல், திறனாய்வு, கல்விசார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இத்தகைய ஆக்கங்கள் இந்தியாவில் கலைமகள், தீபம், தாமரை உட்பட பல புலம்பெயர் இலக்கிய சஞ்சிகைகளிலும், ஈழத்து தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
தொழில் ரீதியாக 1983ஆம் ஆண்டில் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்த புன்னியாமீன், பின்பு கல்லூரி அதிபராகவும், மத்திய மாகாண சபையின் கல்வி, கலாசார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004ஆம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றார்.
வரையறுக்கப்பட்ட “சிந்தனைவட்டம்” தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டு முழுநேர ஊடகவியலாளராகவும், தமிழ் இலக்கிய ஆய்வாளராகவும் செயலாற்றுபவர். இதுவரை 170 நூல்களை தமிழ்மொழி மூலம் எழுதி வெளியிட்டுள்ளார்.
ஆசிரியராகவும் அதிபராகவும் மத்திய மாகாண கலை, கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றிக்கொண்டே முழுநேர ஊடகவியலாளராகவும் பணிபுரிந்து வந்தார். இன்று காலை வபாத்தான எழுத்தாளர் புன்னியாமீனின் ஜனாஸா உடதலவின்ன கலதெனிய பெரிய பள்ளிவாசல் மையவாடியில் இன்றிரவு 8:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது்
சிலோன்24 தனது அனுமாபங்களை அவரது குடும்பத்தாருக்கு கலை இலக்கியவாதிகள் சார்பில் பகிர்கின்றது.