கெய்ட்டோ : ஈக்வடாரில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்ததில் பலியானோர் எண்ணிக்கை233 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, ஈக்வடாரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈக்வடாரின் வடமேற்கு பசிபிக் கடல்பகுதியில் 7.8 என்ற அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கட்டிடகங்கள், வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மற்ற கட்டிடங்களும் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் அந்நாட்டு மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் இடிந்த கட்டிடங்களில் சிக்கி இதுவரை 233 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் கயாகுயில் பகுதியில் உடைந்த பாலமும், மாண்டா நகரில் சேதமடைந்த விமான நிலைய கோபுர போட்டோவும் சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தால் தலைநகரின் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைப்பேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் வாட்ஸ்ஆப் மூலம் மட்டுமே தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து ஆண்டியன் நாட்டு கடல்பகுதியில் அலைகளின் சீற்றம் அதிகரித்துள்ளது. இதனால் ஈக்வடார் மற்றும் கொலம்பியாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடல் அலைகள் ஒன்று முதல் 3 அடி உயரத்திற்கு மேல் எழும்பி வருகிறது. இது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 19 கி.மீ., ஆழத்தில் மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




