ஷிராந்தியிடம் இருந்த டிபெண்டர் மீண்டும் செஞ்சிலுவைச் சங்கத்திடம்



ஸ்ரீ லங்கா செஞ்சிலுவைச் சங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியின் சிறிலிய சவிய வேலைத்திட்டத்துக்கு வழங்கியிருந்த டிபெண்டர் வாகனத்தை பிணைச் சரத்துக்களின் கீழ் மீண்டும் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு வழங்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் கிஹான் பிலபிடிய அறிவித்தல் விடுத்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் மே 11 ஆம் திகதியன்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த வாகனத்தின் இலக்கம், இன்ஜின் இலக்கம் என்பன மாற்றம், திருத்தம் என்வற்றுக்கு உட்படுத்தப்படாதுள்ளதாக அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் நீதிமன்றத்துக்கு முன்வைத்திருந்த அறிக்கையின் பிரகாரம் டிபெண்டரைக் கையளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாகனம் ஹோமாகம பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த டிபெண்டர் சில காலம் பிரபுக்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அத்துடன், சீ.எஸ்.என். தொலைக்காட்சி பணிப்பாளரின் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.