இலங்கையின் கடலுணவு ஏற்றுமதி தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது



இலங்கையின் கடலுணவுப் பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டுள்ளது.
இலங்கை அரசுடனான நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர், தடையை நீக்குவதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளை கண்காணிப்பதற்கும் தடுப்பதற்குமான ஏற்பாடுகளை இலங்கை கடைப்பிடிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியே, 2012-ம் ஆண்டில் இலங்கைக்கு மஞ்சள் அட்டை எனப்படுகின்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
இலங்கை தற்போது அதன் சட்ட ஏற்பாடுகளை திருத்திக் கொண்டுள்ளதாகவும் மீன்பிடி படகுகளை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளையும் முன்னேற்றியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் திருப்தியடைந்துள்ளது.