இலங்கையில் 2012-ம் ஆண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ரக்பி வீரர் 'வாசிம் தாஜுதீனின் கொலை' தொடர்பிலான விசாரணையில் கைதுசெய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் நடந்தபோது நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் தலைமை அதிகாரியாக இருந்த சுமித் பெரேரா என்ற பொலிஸ் அதிகாரியே கைதுசெய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த காவல்துறை அதிகாரி, தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணையின் உண்மையான தகவல்களை முடிமறைத்து விசாரணைகளை முடக்கியதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விசாரணைகள் முடியாத காரணத்தினால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.
அந்த வேண்டுகோளுக்கு ஆட்சேபனை தெரிவித்த சந்தேகநபரின் வழக்கறிஞர் ஆஷா கஹவத்த, தாஜுதீனை கொலை செய்யுமாறு உத்தரவிட்ட நபர்கள் சுதந்திரமாக வெளியே உள்ளதாகவும், குறித்த கொலையுடன் தொடர்பு இல்லாத நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளமையை கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கை முன்னெடுத்து செல்வதாக மக்களுக்கு காண்பிப்பதற்காகவே காவல்துறையினர் இந்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த நீதிபதி, சந்தேகநபரை எதிர்வரும் 5-ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

