தென்கிழக்காசியாவில் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவது குறித்த கட்டுரைகளைத் தொடராக வெளியிட்ட அஸோசியேட்டட் பிரஸ் நிறுவனத்திற்கு பொதுச் சேவைக்கான புலிட்ஸர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு கடல் உணவுகளை தயாரித்து அளிக்கும் இந்த நிறுவனங்களைப் பற்றிய தொடர் கட்டுரைகளின் காரணமாக, 2,000க்கும் மேற்பட்ட கொத்தடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் பயங்கரவாதக் குழு குறித்த கட்டுரைகளுக்காக நியூ யார்க் டைம்ஸிற்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.
குடியேறிகள் பிரச்சனை குறித்த புகைப்படங்களுக்காக தி டைம்ஸ், ராய்ட்டர்ஸ் நிறுவனங்களுக்கும் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.
நாடகத்திற்கான புலிட்ஸர், ஹாமில்டன் என்ற இசை நாடகத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் காவல்துறையினரால் நடத்தப்படும் கொலைகள் பற்றிய ஆழமான கட்டுரைக்காக செய்தி சேகரிப்பிற்கான தேசிய விருது வாஷிங்டன் போஸ்ட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஸான் பெர்நார்டினோவில் நடந்த மிகப் பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த செய்திகளுக்காக தி லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸிற்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
செலவுக் குறைப்பின் காரணமாக ஃப்ளோரிடாவின் மன நல மருத்துவமனைகளில் எப்படி வன்முறை அதிகரிக்கிறது என்ற விரிவான கட்டுரைக்காக புலனாய்வு இதழியலுக்கான விருது தி டம்பா பே டைம்ஸ் மற்றும் சாரசோட்டா ஹெரால்ட் - டிரிப்யூன் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்க இதழியலில் சிறப்பான செயல்பாடுகளுக்காக புலிட்ஸர் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

