வௌ்ளம், மண்சரிவால் 58 பேர் உயிரிழப்பு, 132 பேரைக் காணவில்லை, 3 இலட்சம் பேர் இடம்பெயர்வு



கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளதுடன் 132 பேர் காணாமற்போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக சுமார் நான்கு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவர்களில் இரண்டு இலட்சத்து 99 ஆயிரத்து 806 பேர் இடம்பெயர்ந்து 611 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.
தொடரும் மழையுடனான வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 5,467 குடும்பங்களைச் சேர்ந்த 18,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட 112 குடும்பங்களைச் சேர்ந்த 333 பேர் கரச்சி மற்றும் கண்டாவளை ஆகிய பகுதிகளில் உள்ள 6 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, 1152 குடும்பங்களைச் சேர்ந்த 3956 பேர் தங்களின் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
தொடரும் சீரற்ற வானிலையால் வவுனியா மாவட்டத்தில் 1377 குடும்பங்களைச் சேர்ந்த 5084 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேப்பங்குளம் பகுதியில் உள்ள முகாமில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 49 அங்கத்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 295 குடும்பங்களைச் சேர்ந்த 1025 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வௌ்ளத்தினால் வவுனியா மாவட்டத்தில் 32 வீடுகளுக்கு முழுமையாக சேதம் ஏற்பட்டுள்ளதுடன் 104 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
புத்தளம் மாவட்டத்தில் தொடரும் அனர்த்த நிலை காரணமாக 5400 குடும்பங்களைச் சேர்ந்த 18,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 72 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ புத்தளம் மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பகுதியில் 18 வீடுகளுக்கு முழுமையாக சேதம் ஏற்பட்டுள்ளதுடன் 53 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 183 குடும்பங்களைச் சேர்ந்த 775 அங்கத்தவர்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இவர்களில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 306 பேர் 5 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புலத்கொஹூபிட்டிய – யக்கல சீலாந்த மகாவித்தியாலயத்தில் தங்கியுள்ளவர்களின் நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் சென்றிருந்தனர்.
இதன்போது அங்கிருந்த பொதுமக்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.