வௌ்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.
அதிக மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 237,240 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஏற்பட்ட வௌ்ளத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கேகாலை அரநாயக்க பகுதியில் 39 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் கொடிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
புலத்கோஹோபிட்டியவில் மண்ணுக்குள் புதையுண்டவர்களில் 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, மழையுடனான வானிலைக் காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி தெஹியோவிட்ட பகுதியில் 04 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் ஏற்பட்ட வௌ்ளம் வழிந்தோடி வருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு 11 மணிக்கு நாகலகம் வீதியிலுள்ள நீர் அளவீட்டு மானியில் 4.45 வரை மாத்திரமே நீர்மட்டம் பதிவாகியுள்ளது.
அதற்கமைய கொலன்னாவ மற்றும் கடுவலை பிரதேச செயலக பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த வௌ்ள அபாய எச்சரிக்கை குறைவடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் கூறியுள்ளது.
எனினும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு இதுவரை எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை எனவும், அதிகாரிகள் பார்வையிடுவதும் இல்லை என வத்தளை மாபொல பகுதி மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.