சூழல் பாதிப்பு: அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை



ஏதேனும் ஒரு பிரதேசத்தில் சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கப்படும் பட்சத்தில் அதற்குப் பொறுப்பாகவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
தனது பொறுப்பினை உரியவாறு நிறைவேற்றும் அரச உத்தியோகத்தர்களை பாதுகாப்பதற்கு அரசு எந்நேரமும் பாடுபடுவது போன்று தனது கடமையை உரியவாறு நிறைவேற்றாத உத்தியோகத்தர்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசு பின் நிற்காது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜூன் 05ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக சுற்றாடல் தினத்தோடு இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படும் தேசிய சுற்றாடல் வாரத்தை பிரகடனப்படுத்தும் வைபவம் இன்று (30) முற்பகல் பொலன்னறுவை சேவாமுக்த முகாம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனை வலியுறுத்தினார்.
மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 05ஆம் திகதி வரையான ஒரு வார காலம் தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதனோடு இணைந்ததாக நாடளாவிய ரீதியில் பல்வேறு சூழல்சார் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவு போன்ற நிலைமைகளை எதிர்கொள்ள நேர்ந்த அபாக்கிய நிலைமைகள் தொடர்பாக நாம் மழை வீழ்ச்சியை சபிக்காது சூழலை நாசம் செய்த நபர்களையே சபிக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.
களணி கங்கை பாதுகாப்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட ரீதியற்ற கட்டிட நிர்மாணங்கள் மற்றும் நீர் வழிந்தோடும் மார்க்கங்களில் கட்டிடங்கள் அமைத்தல் என்பன காரணமாக மக்கள் பல நாட்களாக வெள்ளத்தினால் துன்பப்பட நேர்ந்ததனை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இதற்கு இடமளித்த அரசியல்வாதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களே இவற்றிற்கு பொறுப்புக்கூற வேண்டுமென குறிப்பிட்டார்.
எமது நாடு இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் உயிர் பல்லினத்தன்மையின் தரம் என்பன தொடர்பாக பெருமைக்குரிய ஒரு வரலாற்றைக் கொண்டதாயிருப்பினும் கடந்த சில தசாப்த காலமாக அரசியல்வாதிகளின் எதேச்சதிகாரமான செயற்பாடுகள் காரணமாக சூழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நாளுக்கு நாள் உயர்வடையும் சூழல் பாதிப்பு காரணமாக இன்று போல் எதிர்காலத்திலும் முழு உலகமும் எதிர்நோக்கவுள்ள அனர்த்தங்கள் பற்றி நாம் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சூழலைப் பாதுகாத்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது அனைவரதும் பொறுப்பாகுமெனக் குறிப்பிட்டார்.
தேசிய சுற்றாடல் வார செயற்பாடுகளில் பங்களிப்பு செய்தல் சுற்றாடல் அமைச்சுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒரு பொறுப்பல்ல எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அரச துறையைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்கள், தனியார்துறை, பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதற்காக செயல் ரீதியான பங்களிப்பினை வழங்குவதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார்.
தேசிய சுற்றாடல் வாரத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படும் மரநடுகை நிகழ்ச்சியை முன்னிட்டு ஜனாதிபதி, கல்லூரி வளவில் நாக மரக் கன்றினை நாட்டி வைத்தார்.
திம்புலாகல வலய சுற்றாடல் முன்னோடி படையணியினருக்கான பதக்கம் வழங்கி வைக்கும் நிகழ்வு இதன்போது இடம்பெற்றதுடன், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே மரக் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அனுராத ஜயரத்ன, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன ஆகியோரும் பாடசாலை மாணவர்கள், பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பளுகஸ்தமன பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மூத்த கூட்டுறவு உறுப்பினர்கள் இருவருக்கு ஜனாதிபதி இதன்போது விருதுகளை வழங்கி வைத்தார்.