முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டு வந்த இராணுவப்பாதுகாப்பு இன்று(திங்கட்கிழமை) முதல் அகற்றப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பு முழுமையாக இன்று முதல் அகற்றப்படவுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு 103 இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் 50 பேர் ஏற்கனவே அகற்றப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் இன்று முதல் எஞ்சியுள்ள 53 இராணுவத்தினரையும் இன்றைய தினம் அகற்றவுள்ளோம். முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் பாதுகாப்பிற்காக இனிவரும் காலங்களில் பொலிஸாரே ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதேவேளை, முக்கியஸ்தர்களின் பாதுகாப்பிற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்’ எனவும் தெரிவித்துள்ளார்.
