இலங்கையில் அதிகூடிய மழை வீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சியில் என்றுமில்லாதவாறு அதிக கூடிய மழை வீழ்ச்சியாக 373.2 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது.
நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் மற்றும் தென்மேற்குப் பகுதியில், பல இடங்களில் அடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளன. மின்னல் தாக்கங்களிலிருந்து தம்மை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுள்ளது
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால் கிளிநொச்சியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றும் இன்றும் தொடர்ந்து பெய்த அடைமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன்போது வெள்ளம் அதிகரித்தமையினால் வீடுகள், வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி நகர் பகுதியில் சுமார் 373 மில்லி மீற்றர் மழையும் அக்கராயன் மற்றும் கல்மடு பகுதியில் 200 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. வடமாகாணத்தில் மாரிகாலங்களை விட இம்முறைதான் அதிககூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருவதால் சிறிய குளங்கள் வான்பாய்கின்றது அத்துடன் இடி, மின்னல் தாக்கங்களும் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளன. கிளிநொச்சியில் நிலவிய கடுமையான வெப்பத்தையடுத்து நேற்றும் இன்றும் கனமழை தொடர்ந்த வண்ணமுள்ளது.
கன மழையால் கடைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள்ளும் மற்றும் அரச அலுவலகங்களுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்தமையினாலும் வீதிகளை குறுக்கறுத்தும் வெள்ள நீர் பாய்ந்து கொண்டிருப்பதால் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
கிளிநொச்சி நகர் பகுதி, பொன்நகர், சாந்தபுரம், இரணைமடு, சிவபுரம், பண்னங்கண்டி, தருமபுரம் மற்றும் பரந்தன் ஆகிய பிரதேசங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வியாபார நிலையங்களுக்குள் மழை நீர்
உட்சென்றமையினால் அதிகளவில் பொருட்கள் சேதமடைந்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பாதிப்புக்கள் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

