பாதாள உலகக் கோஷ்டி தலைவர் ”ஆமி சம்பத்” கைது



கொழும்பின் பிரபல பாதாள உலகக் கோஷ்டியின் தலைவரான ”ஆமி சம்பத்” என்றழைக்கப்படும் ”சம்பத் சாமர” இன்று பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் பல குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார்.
புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
சம்பத் சாமர என்ற குறித்த சந்தேகநபர் கொம்பனித்தெரு பகுதியில் இருப்பதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு விரைந்த தமது குழுவினர் சந்கேநபரைக் கைது செய்ததாக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி ரஞ்சித் பெரேரா கூறினார்.
சந்தேகநபரின் மனைவியும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைத்துப்பாக்கியொன்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.
கடந்த தேர்தல் காலப்பகுதியில், ப்ளுமென்டல் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆமி சம்பத் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, பாரத லக்‌ஷ்மன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான தெமட்டகொட சமிந்த என்பவர் சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில், தெமட்டகொடை பகுதியில் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரைக் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலும் இவர் சந்தேகிக்கப்படுகின்றார்.