சிறையில் அடைத்தவர்களே, நாம் வேட்டையாடத் தயாராவதாக கூறுகின்றனர்





அரசாங்கம் இராணுவ வீரர்களை வேட்டையாட தயாராவதாக எழுப்பும் குற்றச்சாட்டுக்களுக்குப் பின்னால்  அன்று பொய் குற்றம் சுமத்தி இராணுவ வீரர்களை சிறையடைத்தவர்களே இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (18) மாலை பத்தரமுல்லை பாராளுமன்ற மைதானத்தில் அமைந்திருக்கும் படைவீரர் ஞாபகார்த்த தூபிக்கு முன்னால் நடைபெற்ற 2016 தேசிய இராணுவ வீரர் ஞாபகார்த்த தின விழாவில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தாய் நாட்டின் ஐக்கியத்திற்காக உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூர அரசு எவ்வேளையிலும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மீண்டும் இந்நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படுவதை தடுக்கும் அதேவேளை, யுத்தத்தின் பின்னரான காலத்தில் முன்னெடுக்க வேண்டிய பொறுப்புமிக்க பணிகளை உரிய முறையில்முன்னெடுப்பதற்காகவே 2015 ஜனவரி 08ஆம் திகதி இந்நாட்டு மக்கள் புதிய அரசை பதவிக்கு கொண்டு வந்ததாகவும் அதற்கமைய புதிய அரசானது தற்போது தேசிய ஒருமைப்பாட்டை வலுவூட்டும் அதேவேளை மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான பணிகளையே முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
பௌதீக ரீதியில் யுத்தத்தை வென்றெடுத்த போதிலும் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நிறைவேற்ற வேண்டிய முக்கியப் பொறுப்புக்களை நிறைவேற்றி மக்களை இதயத்தால் இணைக்கும் பணியானது எளிதான காரியமல்ல எனவும், தேசிய நல்லிணக்க செயற்பாடுகளுக்கு வலுசேர்க்க அரசியல்வாதிகளும் படை வீரர்களும் இந்நாட்டுப் பொது மக்களும் ஒன்றுபட்டு செயற்படவேண்டுமெனவும் தெரிவித்த ஜனாதிபதி, இராணுவ வீரர் நினைவு தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினார்.
மகா சங்கத்தினர் உள்ளிட்ட மத குருமார்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி உள்ளிட்ட முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் அனோமா பொன்சேகா உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் படை வீரர்களின் பெற்றோர், உள்ளிட்ட உறவினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.