நிவாரணப் பணிகளில் ஹிரா பௌண்டேஷன்



களத்தில் நின்று நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறது ஹிரா பௌண்டேஷன்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் முன்னின்று வழங்கி வருவதாகவும், கிழக்கு மாகாணத்துக்கு வெளியே மல்வானை மற்றும் அரநாயக்க பகுதிகளுக்கு விசேட உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பின் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வெள்ளிக்கிழமை 20.05.2016 தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
சீரற்ற வானிலையினால் நாட்டு மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக கொழும்பு, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் உதவிக்கரம் நீட்டியுள்ளது. முதல் கட்டமாக வியாழக்கிழமை  மல்வானை பகுதிக்கு எமது நிவாரணப் பொருட்கள் மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் கொழும்பு மற்றும் மாவனல்லை, அரநாயக்க பகுதிகளுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் எம்மை நேரடியாக தொடர்பு கொள்வார்களாயின் உதவிகள் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.
இதேவேளை, அரசாங்கம் முன்னெடுக்கும் நிவாரணப் பணிகளுக்கு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் ஸ்ரீPலங்கா ஹிரா பௌண்டேஷன் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.