அரசாங்கத்திற்கு 600 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியமை தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்டவுக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.வீ.கருணாதிலக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முறைப்பாட்டாளர் சார்பாக வழக்கின் முதலாவது சாட்சியாளர் இன்று சாட்சியமளித்தார்.
சாட்சியாளருக்கு சொந்தமான ஆடை விற்பனை நிலையத்திலிருந்து பெருந்தொகை வெள்ளைத் துணிகள் கொள்வனவு செய்யப்பட்டதாக சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாட்சியம் வழங்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை ஜூன் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமாகும் எனத் தெரிவித்து, கெஃபே அமைப்பு, அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மெத்தும பண்டாரவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அனுஷ பெல்பிட்ட மாத்திரமே அரச சேவையில் பதவி வகிக்கும் அதிகாரியாகக் காணப்படுகின்றார் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவன சட்டக் கோவையின் பிரகாரம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒருவரை அரச சேவையில் ஈடுபடுத்த முடியாதென கெஃபே சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக இந்த சட்டவிரோத செயற்பாட்டை சரிப்படுத்துமாறு, கெஃபே அமைப்பு அரச நிர்வாக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், இந்த நடவடிக்கையானது இலங்கை அரச நிர்வாக சேவையில் கரும்புள்ளியாகும் என்றும் கெஃபே அமைப்பு தமது கடித்ததில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

