இலங்கை இயற்கை சீற்றம்: பலி எண்ணிக்கை 101 ஆக உயர்வு



இலங்கையில் சீரற்ற கால நிலை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.
இறந்தவர்களின் எண்ணிக்கை 101 என்றும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 100 என்றும் இடர் முகாமைத்துவ மையத்தின் துனை இயக்குநரான பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
நிலச்சரிவுகளின் பின்னர் புதையுண்டு காணாமல் போனவர்களில் சிலர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் 100 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
அரநாயக்க பிரதேசத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில் முரண்பாடுகள் காணப்படுகின்றதுன. அந்தப் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ மீடபுக் குழுவினால், 6 பெண்கள் உட்பட 27 சடலங்களும் 20 மனித உடற் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதன. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 132 என இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்திருக்கின்றார்.
இடர் முகாமைத்துவ அமைச்சினால் இறுதியாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மழை வெள்ளத்தால் 28, நிலச்சரிவுகள் காரணமாக 73 மரணங்கள் பதிவாகியுள்ளன.
பாரிய நிலச்சரிவு அனர்த்தம் என கருதப்படும் கேகாலை அரநாயக்க பிரதேசத்தில் இறந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளை, காணாமல் போனோர் எண்ணிக்கை 97 ஆக குறைந்துள்ளது.
மழை வெள்ளம் தற்போது வடிந்துள்ள நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்த குடும்பங்களில் 60 சதவீத குடும்பங்கள் தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
தற்போதைய தகவல்களின்படி கொழும்பு , கம்பஹா உட்பட 256 மையங்களில் 26 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர்.