(கிஸாந்தன்)
கன மழையினால் இருவர் மரணித்துள்ளனர். ஒருவரைக் காணவில்லை.7099 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பிலும் சோவென மழை கொட்டிய வண்ணமுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பாகங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் மலையகத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா - சாமிமலை - ஸ்டர்ஸ்பி சூரியகந்தை தோட்டத்தில் மண்சரிவு காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 96 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அப் பகுதியின் பாதுகாப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சூரியகந்தை தோட்ட ஆறாம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டதோடு, இன்றும் தொடர்சியாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனால், மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக இக் குடியிருப்பில் வசித்து வந்த 96 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் தோட்ட சிறுவர் நிலையம், சிறுவர் முன்பள்ளி ஆகிய இடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரவளையில் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளதுடன் பனி மூட்டத்துடனான வானிலை காணப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை அதிக மழை காரணமாக பலப்பிட்டி களப்பை, அண்மித்த பாத்தமில்ல ஒவுலான – அந்தரவெல பகுதியில் 57 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்டத்தின் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நீர் வடிந்தோடுவதற்கு கொஸ்கொட கழிமுகத்தை விரிவுபடுத்தியுள்ளதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.


