ருஹுணு மக்களின் வேண்டுகோளை ஜனாதிபதி நிறைவேற்றினார்



மக்களுக்கு நம்பிக்கையுடன் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளித்து அதன் தரத்தினைப் பிரிசோதிப்பதற்கு உரிய வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
(25) பிற்பகல் காலியில் தாபிக்கப்பட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களைப் பரிசோதிக்கும் ஆய்வுகூடத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இவ் ஆலோசனையினை வழங்கினார்.
காலி மாவட்ட மக்கள் இரண்டு தசாப்பதங்களுக்கும் மேற்பட்ட காலமாக கோரியிருந்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு இணங்க இவ் ஆய்வுகூடம் காலியில் ஸ்தாபிக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் இவ்வாறான ஆய்வுகூடங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் அரசின் நம்பிக்கையை உறுதிசெய்யும் நோக்கில் இவ் ஆய்வுகூடங்கள் ஸ்தாபிக்கப்படுகிறது.
இதன் போது தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திரு. அசங்க வெலகெதரவினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர்களான வஜிர அபேவர்தன, கயந்த கருணாதிலக்க, பிரதி அமைச்சர் மனுஷ நானாயக்கார மற்றும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திரு. அசங்க வெலகெதர ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.