அரச வைத்தியர்களின் போராட்டத்தின் பின்னணியில் எதிர்க்கட்சி



அரசாங்க வைத்தியர்களின் அண்மைய தொழிற்சங்க போராட்டத்தின் பின்னணியில் எதிர்க்கட்சியின் குழுவொன்று செயற்பட்டுள்ளதாக இரகசிய அறிக்கையொன்று அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.
அண்மையில் அரசாங்க வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொண்டனர். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இந்தப் போராட்டம் மேற்காள்ளப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் பின்னணியில் எதிர்க்கட்சியின் சில அரசியல் சக்திகள் செயற்பட்டுள்ளதாக இரகசிய அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
வேலை நிறுத்தப் போராட்டங்களின் ஊடாக அரசாங்கத்தை நெருக்கடிக்குள் சிக்க வைப்பதே இந்த அரசியல் சக்திகளின் நோக்கமாக அமைந்துள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவினர் இந்த போராட்டம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் நேரடியாகவே இந்தப் போராட்டத்தின் பின்னணியில் செயற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் நேற்று புலனாய்வுப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.
இந்த போராட்டம் வெற்றியளித்திருந்தால் தாதியர் உள்ளிட்ட ஏனைய தொழிற்துறைகளைச் சேர்ந்தவர்களையும் போராட்டத்தில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
அரச மருத்துவ சங்கத்தின் அதிகாரிகள் சிலர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான கொழும்பு இல்லத்தில் கூட்டமொன்றை நடத்தியுள்ளதாக இரகசிய அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.