பேரிச்சம் பழங்கள் களவாடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு



யாழ் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட பேரிச்சம் பழங்களின் ஒரு தொகை காணாமல் போனதால் மக்கள் ஆத்திரமடைந்து யாழ். பெரிய முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத்துடன் முரண்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் குறித்த பள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது.
இதன் போது நிலைமையை சமாளிக்க மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக அப்பள்ளிவாசலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய விவகார அமைச்சினால் யாழ். முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட 125 பெட்டி பேரிச்சம் பழங்களில் 45 கிலோ பெட்டிகள் திடிரென காணாமல் போனதாக அறிந்ததை அடுத்து மக்கள் பள்ளிவாசலை சுற்றி வளைத்தனர்.
பின்பு பேரிச்சம்பழத்தினை ஏற்றி வந்த தரப்பு காணாமல் போன பேரிச்சம்பழங்கள் யாழ். மாவட்டத்திற்கு அடுத்ததாக உள்ள கிளிநொச்சி மக்களிற்கு வழங்குவதற்கு எடுத்து வைத்ததாக குறிப்பிட்டு மாலையில் அவற்றை மீளவும் பள்ளிவாசலுக்கு பாரப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
மக்களின் கருத்துப்படி கே.கே.எஸ் பள்ளிவாசல் நிர்வாகி என தன்னை கூறுபவரும், பருத்தித்துறை பள்ளிவாசல் நிர்வாகி என கூறுபவரும் தான் அவற்றை எடுத்துச்சென்றதாக ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.
– பாறுக் ஷிஹான் –