வற் வரியினை அதிகரித்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்



இலங்கையில் மதிப்புக்கூட்டு வரியை அதிகரிக்க போடப்பட்டுள்ள தீர்மானத்தை கண்டித்து தென் மாகாணத்தில் காலி நகரில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி மாவட்ட சேர்ந்த வியாபாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டம் காரணமாக நகரில் வியாபார நடவடிக்கைகள் முழுமையாக தடைபட்டதன.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காலி மாவட்ட வியாபாரிகளின் சங்கத்தின் தலைவர் ஹேமந்த கமகே, பொது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்புக்கூட்டு வரி அதிகரிப்பு காரணமாக பொது மக்களும், வியாபாரிகளும் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார்.
12.5% வீதமாக இருந்த மதிப்புக்கூட்டு வரியை 15% ஆக அதிகரித்ததற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.
இந்த வரி அதிகரிப்பு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக மக்களுக்கு பொருட்களை கொள்முதல் செய்யும் சக்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்த ஹேமந்த கமகே, இதன் மூலம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒரு போராட்டம் அல்ல என்று கூறிய ஹேமந்த கமகே, இந்த வரி அதிகரிப்பு காரணமாக மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.