குத்துச்சண்டை உலகின் தலைசிறந்த வீரர் மொஹமட் அலி இயற்கை எய்தினார்



குத்துச்சண்டை உலகின் தலைசிறந்த வீரரும் முன்னாள் உலக சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74 ஆவது வயதில் காலமானார்.
முகமது அலி தன்னைத்தானே, 'மாபெரும் மனிதன்’ என அறிவித்துக் கொண்டார்.
''பாக்ஸிங் ரிங்குக்குள் பட்டாம் பூச்சியை போல பறப்பேன், தேனியை போல கொட்டுவேன்'' என்பது முகமது அலியின் மிக பிரபலமான வரி.
1964ல் குத்துச்சண்டையில் ஜாம்பவானாக இருந்த சோனி லிஸ்டனை முகமது அலி வீழ்த்தினார். அதிக எடைப்பிரிவில் மூன்று முறை உலகப்பட்டங்களை வென்றுள்ளா்
ஜோ ப்ரேஸியருடன் பரப்பரபான சண்டைகளை போட்ட முகமது அலி, ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்தி 'ரம்பிள் இன் த ஜங்கிள்' பட்டத்தை கைப்பற்றினார் .இனவெறிக்கு எதிராக கடுமையாக செயல்பட்டவர் முகமது அலி. வியட்நாமுக்கு எதிரான போரின்போது அமெரிக்க ராணுவத்தில் இணைந்து பணியாற்ற மறுத்தது மற்றும் 'நேஷன் ஆஃப் இஸ்லாம்’ என்ற கருப்பின இஸ்லாம் குழுவில் இணைந்தது ஆகிய நடவடிக்கைகளால் அமெரிக்கர்களின் வெறுப்புக்கு ஆளானார்.
அவரது மத நம்பிக்கைகள் காரணமாக, வியட்நாம் போரின் போது அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்த்தால், அவரது உலக சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் அவரது குத்துச்சண்டை போட்டிகள் முடங்கிப் போயின.
தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னராக வலம் வந்தவர் முகமது அலி. அவர் தனது இளமை காலங்களில் 61 போட்டிகளில் 56 வெற்றிகளை குவித்தார்.
மேலும் வரிசையாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தினார். தொழில்முறை குத்துச்சண்டையில் அவர் 5 போட்டிகளில் மட்டுமே தோல்வியை எதிர்கொண்டார்.
1981-ல் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அதன்பின்னர் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
சுவாசக் கோளாறு காரணமாக நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சற்று  முன்னர் காலமானதாக ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குத்துச்சண்டை அரங்கில் பல சாதனைகளுக்கு உரித்துடைய மொஹமட் அலி 1981 ஆம் ஆண்டு சர்வதேச குத்துச்சண்டை கோதாவிலிருந்து விடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.