மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிக்கல பிரதேசத்தில் கிராம சேவை அதிகாரியொருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு அரசாங்க மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அந்த பிரதேசத்தில் செவ்வாய்கிழமை இரவு இடம் பெற்ற சட்ட விரோத மரக்கடத்தலை தடுத்தமை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
கிரான் பிரதேசத்திலுள்ள புலாக்காடு கிராம சேவை அதிகாரியான சண்முகம் குரு என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலை கண்டித்தும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் . என வலியுறுத்தியும் இன்று புதன்கிழமை பிரதேச செயலக ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதி மொழிகளையடுத்து பிரதேச செயலக ஊழியர்கள் தமது பணிப் புறக்கணிப்பை கைவிட்டு கடமைக்கு திரும்பினர்.
தொப்பிக்கல வன பிரதேசத்தில் காடழிப்பு , சட்ட விரோத மரக் கடத்தல் , வன ஜீவராசிகளை வேட்டையாடுதல் போன்ற சட்ட விரோத செயல்பாடுகள் குறிப்பாக இரவு நேரங்களில் இடம் பெறுவதாக கூறப்படுகின்றது
இதனை கண்காணிப்பதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சென்றிருந்த அதிகாரிகள் குழுவில் இடம் பெற்றிருந்த கிராம சேவை அதிகாரியொருவர் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலக்கு வைத்துத் தாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
அந்த பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரங்களை ஏற்றி வந்த உழவு இயந்திரமொன்று அதிகாரிகளினால் வழி மறிக்கப்பட்டதாகவும் அதனை விடுவிக்குமாறு இராணுவம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான முரண்பாடுகளின் போதே குறித்த கிராம சேவை அதிகாரி இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரன்.
இலங்கையில் ஜனாதிபதியினால் இந்த வாரம் சூழல் பாதுகாப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தினாலும் தன்னார்வ தொண்டர் அமைப்புகளினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வேலைத்திட்டத்தின் ஒர் அங்கமாக வன பிரதேசத்தை கண்காணிக்க சென்றிருந்த போதே தான் இந்த தாக்குதல் இடம் பெற்றிருப்பதையும் யோகேஸ்வரன் சுட்டிக் காட்டுகின்றார்
இது தொடர்பாக இராணுவத்தின் கருத்தை பெற முயன்ற போதிலும் தொடர்புகள் கிடைக்கவில்லை.


Post a Comment
Post a Comment