அரியநேத்திரன் குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரணை



தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் இன்று குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரணை செய்யப்பட்டார்
கொழும்பு குற்றப்புலனாய்வுத் தலைமயகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், 10 வருடங்களுக்கு முன்பு மட்டக்களப்பு புறநகர் பகுதியில் இடம் பெற்ற அரசியல் படுகொலை சம்பவமொன்று தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
2004-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தேர்வாகியிருந்த கிங்ஸிலி இராசநாயகம் படுகொலை தொடர்பான விசாரணைக்காகவே தான் அழைக்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், தெரிவித்தார்.
அக்காலப் பகுதியில் விடுதலைப்புலிகளின் பிராந்திய அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த கௌசல்யனின் உறவு முறை பற்றி கேட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
2004-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2015-ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பா. அரியநேத்திரன், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தேர்வாகவில்லை.
விருப்பு வாக்கு அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக கிங்ஸிலி இராசநாயகம் தேர்வான போதிலும், அவர் பதவிப் பிரமாணம் செய்யாமலே ஒரு சில நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார்.
விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் ராஜினாமா செய்து கொண்டதாக அவ்வேளையில் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
அந்த வெற்றிடத்திற்கு விருப்பு வாக்குகள் அடிப்படையில் அடுத்த இடத்திருந்த பா. அரியநேத்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
கிங்ஸ்லி இராசநாயகம் பதவியை இராஜினாமா செய்த ஆறு மாதங்களுக்கு பிறகு, அக்டோபர் 19-ஆம் தேதியன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியிலுள்ள அவரது காணியை பார்வையிட சென்றிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் தான் பொறுப்பு என ஏற்கனவே அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2004-க்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் கிங்சிலி இராசநாயகம், தமிழர் புனர்வாழ்வு கழகத்திலும் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் 2004-ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவின் பின்னர், இவர் கொண்டிருந்த நிலைப்பாடு காரணமாக அந்த அமைப்பினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.