மகளை கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்த தாய்: அம்பாறையில் சம்பவம்



அம்பாறையில் தாய் ஒருவர் தனது மகளை அடித்துக் கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாறை – மத்திய முகாம் 4 ஆம் பிரிவிலுள்ள தாய் ஒருவரே கடந்த 31 ஆம் திகதி தனது மகளைக் கொலை செய்து புதைத்துள்ளார்.
இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு பிரச்சினை வலுப்பெற்றதையடுத்து 55 வயதான தாய் தனது 21 வயது மகளை அடித்துக் கொன்றுள்ளார்.
அதன் பின்னர், அவரை வீட்டின் பின்புறத்தில் புதைத்துவிட்டு தனது மகளைக் காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸாரின் விசாரணைகளின் போது சடலம் வீட்டின் பின்புறமிருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் மத்திய முகாம் 11 ஆம் பிரிவைச் சேர்ந்த கந்தசாமி ஜனனி எனவும் அவருக்கு 4 வயது ஆண் பிள்ளை ஒன்று இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தக் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணிக்கம் பார்வதிக்கு 4 ஆண் பிள்ளைகள் உள்ளதுடன், கொலை செய்யப்பட்ட யுவதி பார்வதியின் வளர்ப்பு மகள் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட ஜனனியின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதுடன், 4 வயது மகன் உறவினரின் வீட்டில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் மத்திய முகாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.