''நவீன தகவல் தொடர்பு சாதனம் வாயிலாக இந்திய - இலங்கை மக்கள் இந்தக் கொண்டாட்டத்தில் இணைந்துள்ளனர்



யாழ்ப்பாணத்தில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட துரையப்பா விளையாட்டு மைதானத்தை, இந்திய பிரதமர் நரேந்திர மோதி காணொளி மூலமாக திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்தில், இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்கேற்றார்.
துரையப்பா மைதானம், யாழ்ப்பாண நகர முன்னாள் மேயர் அல்ப்ரெட் தம்பிராஜா துரையப்பாவின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை ஏழு கோடி ரூபாய் செலவில் இந்தியா புனரமைத்துள்ளது.
திறப்பு விழாவில் உரையாற்றிய இந்திய பிரதமர் மோதி, ''நவீன தகவல் தொடர்பு சாதனம் வாயிலாக இந்திய - இலங்கை மக்கள் இந்தக் கொண்டாட்டத்தில் இணைந்துள்ளனர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு துரையப்பா மைதானத்தில் கரவொலியும், உற்சாகமும் நிரம்பி வழிகிறது'' என்றார்.
மேலும் அவர், ''நாங்கள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் டெல்லியில் இருந்தாலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் துடிப்பை உணர முடிகிறது. இந்த மைதானம் வெறும் சிமென்ட் மற்றும் செங்கற்களால் ஆனதல்ல. ஆக்கப்பூர்வமான மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான அடையாளம்,''என்றார்.
அந்த நிகழ்வில், இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்கள் யாழ்ப்பாணத்தில் பங்கேற்றார்கள்.
அப்போது, பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.
அதை, காணொளி காட்சி மூலம், நரேந்திர மோதி, இந்திய வெளியறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் பார்த்தனர்.