முகத்திரை தடையால் மூடிய காஷ்மீர் பள்ளி



உள்ளூர் இந்து அறக்கட்டளையால் நடத்தப்படும் பள்ளி ஒன்றுக்குள் முஸ்லீம் பெண்கள் அபாயா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதி முழுவதுமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லீம் பெண்களால் அணியப்படும் கறுப்பு நீள அங்கி போன்ற மேலாடை அபாயா எனப்படுகிறது.
ஓர் ஆசிரியையை அபாயா அணிந்து வந்ததற்கு கோபமாக பேசியுள்ள பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி பப்ளிக் பள்ளி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
“உயிரியல் ஆசிரியர் ஒருவரிடம் “வேலையா? உங்களுடைய உடையா? என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்” என்று பள்ளி முதல்வர் கோபமாக கேட்டுள்ளதால் வகுப்புகள் புறக்கணிக்கப்பட்டு, பள்ளியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி என்னுடைய குழந்தைகள் முன்னரே வந்துவிட்டனர்”, என்று இரண்டு குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்த்துள்ள சுஹையில் இக்பால் தெரிவித்தார்.
காஷ்மீர் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக டெல்லி பப்ளிக் பள்ளியும் இருக்கிறது.
மத விவகாரங்களில் தலையீடு என்று இதனை காஷ்மீர் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
“டெல்லி பப்ளிக் பள்ளி மதசார்பற்ற மதிப்பீடுகளில் நம்பிக்கை கொண்டுள்ளது. தனிப்பட்ட ஒருவர் உடை அணிவதில் யாரும் தலையிடக் கூடாது. பள்ளிக்கூட நிர்வாகிகளுக்கு புகார் அனுப்பி இதற்கு விளக்கம் கேட்போம்”, என்று காஷ்மீர் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.