"மைத்திரியையும், ரணிலையும் தும்புத் தடியால் விரட்டனும்"



மைத்திரி மற்றும் ரணிலின் நல்லாட்சி அரசாங்கத்தினை, பியகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் நிமல்கா கொந்தேவேல தும்புத்தடி காட்டி விமர்ச்சித்தமை பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கை சுமை அதிகரித்திருப்பதால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இந்த அரசாங்கத்தை தும்புத்தடியால் அடித்து விரட்ட வேணடும் என அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்புக்கு கொண்டு வந்திருந்த தும்புத்தடியை உயர்த்திக் காட்டி அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிராமங்களில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர் கூட தொழில் வாய்ப்பின்றி இருந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில், எப்படி 10 லட்சம் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் எனவும் நிமல்கா கொந்தேவேல தெரிவித்துள்ளார்.
அதேவேளை பசில் ராஜபக்ச தற்போது அரசாங்கத்திற்கு பிரச்சினையாகியுள்ளதாகவும் அவர் அரசாங்கத்தை கவிழ்க்கக் கூடியவர் என்பதால், எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு மு்னனர் அவரை கைது செய்துள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
அரச நிதியில் சட்டரீதியான முறைக்கு அமைய பொருட்களை கொள்வனவு செய்து அரச நிறுவனங்களுக்கே வழங்கியதால், கைது செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
மேலும் அத்தியவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அந்த விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய முடியவில்லை. இவ்வாறான நிலைமை மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இருக்கவில்லை எனவும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக தும்புதடியினை காட்டிய இவ்விடயம் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் என்ன முடிவு எடுக்கப்போகின்றார்கள் என்பதனை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.