#அப்துல் கலாம்;முதலாம் நினைவு தினம்




(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)

இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக இருந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் எனப்படும் அவுல் பக்கீர் ஜெயினுலாவுதீன் அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார்.

ஐந்தாம் வகுப்பு வரை ராமேஸ்வரத்திலும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை ராமநாதபுரத்திலும் அவர் படித்தார். பின்னர் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பட்டமும், சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி.எனப்படும் மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் வான் பொறியியல் பட்டமும் பெற்றார். அதன்பிறகு 1963ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கலாம் பணிக்கு சேர்ந்தார். 20 ஆண்டுகளாக கேரளாவில் உள்ள தும்பா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அவர்பணிபுரிந்தார்.

அதனைத் தொடர்ந்து, ஒடிஷா மாநிலம் சண்டிபூரில் உள்ள ராக்கெட் ஏவுகணைத் தளத்திலும் 20 ஆண்டுகளாக அவர் பணியாற்றினார். பிறகு அக்னி, பிருத்வி உள்ளிட்ட பல ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை நடத்திய பெருமையும் அப்துல் கலாமுக்கு உண்டு. 1982ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு பொக்ரைனில் இந்தியா நடத்திய பொக்ரைன் அணுகுண்டு சோதனைக்கு மூளையாக செயல்பட்டவரும் அப்துல் கலாம் தான். 1999 நவம்பர் முதல் 2001 நவம்பர் வரை அவர் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

இதேபோல் அறிவியல் ஆலோசனைக்குழுவின் தலைவராகவும் அவர் பதவி வகித்தார். அப்துல் கலாமின் சேவைகளைப் பாராட்டி, மத்திய அரசு கடந்த 1981ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 1990ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவித்தது. அதனைத் தொடர்ந்து நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கலாமிற்கு கடந்த 1997ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதுதவிர, 30 பல்கலைக்கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன. பத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு விருதுகளையும் கலாம் பெற்றார். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல இந்தியாவின் முதல்குடிமகன் அதாவது குடியரசுத் தலைவர் என்கிற பெருமை அப்துல் கலாமிற்கு கிடைத்தது.


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த ஆண்டு இதே ஜூலை 27ம் தேதி காலமானார். அவர் இறந்து இன்றுடன் ஒருவருடம் ஆகிறது.  அவரது  முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில்  அப்துல் கலாமிடம் நீண்டகாலம் உதவியாளராக பணியாற்றிய ஜன் பால் சிங், புதிய நூல் ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் அவர் அப்துல்கலாமின் நிறைவேறாத ஆசை ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் தனது  மூத்த சகோதரரான முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயரை தந்தையை போல் கருதி வந்தார். முக்கிய முடிவுகளை எடுக்கும்போதும், மத சம்பந்தமான  சந்தேகங்கள் எழும் போதும் தன்னை விட 16 வயது மூத்தவரான அவரிடம் ஆலோசனை நடத்த தவறியது இல்லை.

99 வயதான மரைக்காயர் ராமேஸ்வரத்தில் உள்ள தங்களது பூர்விக இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் தனது தம்பி அப்துல் கலாமை சந்திக்க  அவர் டெல்லிக்கு வந்திருந்தார். இரவு உணவின்போது அண்ணனை சந்தித்து மனம்விட்டு பேசிய அப்துல் கலாம், அவரை அன்புடன் சொந்த ஊருக்கு வழியனுப்பி  வைத்தார். அப்போது, என்னை  அருகில் அழைத்த கலாம், வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி என் அண்ணனுக்கு 99வது பிறந்தநாள் வருகிறது. இந்த ஆண்டுக்குள் அவர்  எத்தனைமுறை சூரியனை சுற்றி வந்துள்ளார் என்று சரியாக சொல்லுங்களேன் பார்ப்போம்? என்று கேட்டார். ஒவ்வொரு முக்கியமான நபரின் பிறந்தநாட்களின்  போதும் இப்படி ஒரு கேள்வியை அவர் கேட்பது வாடிக்கை. மிகச்சிறந்த ராக்கெட் விஞ்ஞானியான அவர், சூரியனை பூமி சுற்றிவரும் நாட்களையும், சந்திரன் பூமியை  சுற்றிவரும் நாட்களையும் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என கருதினார். 

நான் 100 முறை என்று பதில் அளித்தேன். அதற்கு அவர் மிகவும் சரி. அடுத்த ஆண்டு நவம்பரில்(அதாவது தற்போதைய 2016ம் ஆண்டு) எனது அண்ணனின் 100-வது  பிறந்தநாள் வருகிறது. அவர் தனது பிறந்த நாளை ஒருபோதும் பெரிய அளவில் கொண்டாடியது இல்லை. ஆனால் அவரது  100வது பிறந்த நாளை முன்னிட்டு  நான்  அவருக்கு ஒரு ’சர்ப்ரைஸ் பார்ட்டி’ கொடுக்க ஆசைப்படுகிறேன். அவர் அதை விரும்புவார்தானே என்று என்னிடம் கேட்டார். அண்ணனின் 100-வது பிறந்தநாள் விழா  ஏற்பாடுகள் எல்லாம் மிகவும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் . அதுவும் எனது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் தான் நடக்க வேண்டும். 

இந்த விழாவுக்கு  குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள், கொள்ளு பேரன் பேத்திகள் வரை அனைவரையும் அழைக்க வேண்டும். சுமார் 50 பேர்  வரை இதில் கலந்து கொள்வார் என்று அவர் தெரிவித்தார். விழா கொண்டாட்டங்களை அரை மணிநேரம் ஆலோசனை நடத்தி இறுதி செய்தார். ஆனால்,  அண்ணனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இறுதி செய்த 7வது வாரத்தில் கலாம் நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவரது கனவும் நிறைவேறாமல் போய்விட்டது.  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.