அதிகாரம் வேண்டும்



கிழக்கு மாகணத்திலுள்ள காணி, பொலிஸ் உட்பட அனைத்து அதிகாரங்களையும் கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழ் கொண்டு வர வேண்டுமென கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் இன்று (14) கிழக்கு மாகாண சபைக்கு வருகை தந்த ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் வலியுறுத்தியதாக கிழக்கு மாகண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில், இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஓரங்கமாக அரசியல் திருத்தத்தின் மூலம் அதிகாரப் பகிர்வாகக் கொண்டு வரப்பட்ட மாகாண சபைக்குரிய அதிகாரங்கள், குறிப்பாக, கிழக்கு மாகாண சபைகளுக்கு இன்னமும் கிடைக்காதிருப்பது பல வழிகளில் அபிவிருத்திக்குத் தடையாக இருக்கின்றது. இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஆகவே, குறிப்பிட்ட அதிகாரங்களை முதலமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு உடனடியாக நடவக்கை மேற்கொள்ள வேண்டுமென அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.


மேலும், இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த இனப்பிரச்சினையின் காரணமாக இடம்பெயரச் செய்யப்பட்டு அகதிகளான மக்களின் மீள் குடியேற்றத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு, சுனாமி, பெரு வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முறையான வாழ்வாதாரத் திட்டங்கள் வெற்றியளிக்காத நிலை காணப்படுகின்றது என்பதையும் அமெரிக்கப் பிரதிநிதியிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இதன் போது, மாகாண சபையின் முதலமைச்சர், அமைச்சர்கள், தவிசாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல  முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.