நல்லாட்சிக்குள் மறைந்துகொண்டு தவறிழைப்போருக்கு இடமளின்கப் போவதில்லை



நல்லாட்சி என்ற பெயர்ப் பலகைக்குள் மறைந்துகொண்டு எவரும் தவறிழைப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி சவால்கள் எனும் தொனிப்பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (22) இடம்பெற்ற விசேட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
ஒழுக்க விழுமியங்கள், பண்பாடு, நல்லாட்சி எண்ணக்கரு, சட்டத்தைப் பேணுவதுடன், பாதுகாத்து போஷித்தல் போன்ற காரணிகள் மீது தாம் ஆரம்பம் முதல் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த காரணிகளைப் பேணுவதன் ஊடாக சுபீட்சமிக்க இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான முன்னுதாரணம் அரசியல்வாதிகளிடம் இருந்தே வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடி அரச உத்தியோகத்தர்களின் சுயாதீன சேவையை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தாம் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அதிகாரம் மீது தமக்கு பேராசை இல்லையென்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, சொல்ல வேண்டிய விடயங்களை சொல்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் தயக்கம் காட்டப் போவதுமில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை, F. C. I. D. என்ற நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு தொடர்பில் எவரும் பீதியடையத் தேவையில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

கடந்த சில மாதங்களாக அதிகாரிகள் மாத்திரமின்றி சில அமைச்சர்கள் கூட F.C.I.D. தொடர்பில் தேவையற்ற அச்சமடைந்துள்ளதாகவும், நாட்டில் முன்னர் நிலவிய சீரற்ற செயற்பாடுகள் காரணமாகவே அந்த பிரிவை ஏற்படுத்துவதற்கு வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டில் இடம்பெறும் முறைகேடுகளை எந்த விதத்திலேனும் நிறுத்த வேண்டிய தேவை காணப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, மனிதனிடம் அச்சம் மற்றும் வெட்கம் இல்லையெனில், மனிதன் விலங்கைப் போன்றே நடந்துகொள்ள நேரிடும் என மேலும் தெரிவித்தார்.