மகிந்த ஆரம்பித்ததை மைத்திரி திறப்பதா? கேட்பது பிள்ளையான்



பழைய தலைவர் ஆரம்பித்த வேலையை புதிய தலைவர் வந்து திறக்கும் நிலையே உருவாகிவருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நீதிமன்றிற்கு கொண்டுவரப்பட்ட அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லும்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அதிகளவான வாக்குகளைப்பெற்றவர் புதிதாக நிர்மாணித்தே திறக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் அதிகளான வாக்குகளைப்பெற்றவர் முன்னாள் ஜனாதிபதி ஆரம்பித்த வேலைத்திட்டத்தினை திறந்துவைக்க வருவதாகவும் இதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்ன கூறப்போகின்றார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தினை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தரவிருப்பதை முன்னிட்டே இக்கருத்துகளை சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெபர் மைதானம் மகிந்த ராஜபக்ஸ காலத்தில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.