பெறுமதி சேர்வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியன தொடர்பில் உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடை அரசாங்கத்தின் வருமானத்தைப் பாதிக்காது என, பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
11 சதவீதமாக இருந்து வந்த பெறுமதி சேர்வரி அண்மையில், 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
இந்தநிலையில், பெறுமதி சேர்வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, ஆகியவை தொடர்பான திருத்த யோசனை, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை, அதனை அமுல்படுத்தப்படுவதற்கு இன்று உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
எனினும் இந்தத் தடை அரசாங்கத்தின் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என, இது குறித்து பிரதமர் அலுவலகத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரித் திருத்தம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மீதான முதலாம் வாசிப்பு கடந்த 8ம் திகதி இடம்பெற்றதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வரித் திருத்த யோசனை மீதான இரண்டாம் வாசிப்பை எதிர்வரும் 23ம் திகதி மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த யோசனை இம் மாத இறுதிக்குள் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மே மாதம் 2ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரித் திருத்த யோசனை அமுல்படுத்தப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

