களுவாஞ்சிக்குடி– வெல்லாவெளி, காக்காச்சிவெட்டை கிராமத்தில் கிணறு ஒன்றில் இருந்து குழந்தை உட்பட இருவரது சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.அத்துடன் தந்தையார் அடிகா யங்களுக்கிலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
காக்காச்சிவெட்டை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான பிரசாந் விஜிதா மற்றும் அவரது மகளான ஒன்றரை வயதுடைய பிரசாந் சஸ்மி ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாயும் குழந்தையும் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் காணாமற்போயிருந்த நிலையில் குறித்த இருவரும் கிணற்றில் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த விஜிதாவின் தந்தையான 56 வயதுடைய பேரின்பராசா என்பவர் பலத்த அடிகாயங்களுக்குட்பட்ட நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த விஜிதாவின் கணவர் சந்தேகத்தின்போரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

