ஜனாதிபதியின் வலைத்தளத்தில் ஊடுருவிய 17 வயது மாணவன் சிறுவர் இல்லத்தில்



ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹக் (ஊடுருவினார்) செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

அதன்போது கைதுசெய்யப்பட்ட மாணவனை, சிறுவர் இல்லத்தில் எதிர்வரும் 2ஆம் திகதிவரை தடுத்து வைக்குமாறும் இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹெக் செய்த சம்பவம் தொடர்பில் கடுகன்னாவையில் வைத்து 17 வயதுடைய பாடசாலை மாணவன் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில்,  மொரட்டுவையைச் சேர்ந்த 26 வயதான சந்தேகநபரொருவரை, இன்று பொலிஸார் கைதுசெய்திருந்தனர். 

கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று, ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹக் செய்து,  'இலங்கை இளைஞர்கள்' என்ற பெயரில் தகவலொன்று பதிவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்கள் தொடர்பாக மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்தனர்.
இந்த சட்ட விரோத செயலின் பின்னணியில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு நபர் இருப்பதாகக் கூறிய போலிசார், அந்த நபர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கருத்துக்களைத் தெரிவித்தபோது பொதுமக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவே அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் ஜனாதிபதியின் வலைத்தளத்தில் சில கருத்துக்களை மாத்திரம் பதிவு செய்துள்ள காரணத்தால் அவர்களுக்கு பிணை வழங்குமாறு வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்தார்.