ஒலுவில் கடற்கரையோரப் பகுதியில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு தற்போது மேலும் தீவிரமடைந்து வருவதனால் கரையோர மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மக்களின் வாழ்விடத்திற்கான நிலத்தையும் கடல் கபளீகரம் செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக ஒலுவில் கரையோரப் பகுதியில் இடம்பெற்று வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் துறைமுகத்தை அண்மித்த பகுதி, பாரிய இயற்கை அழிவினை எதிர்கொண்டுள்ளது.
ஒலுவில் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு தொடர்பில் நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தோம்.
தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் கடல் அரிப்பினால் ஒலுவில் துறைமுகத்தினை அண்மித்த சுமார் 800 மீற்றர் கரையோர பகுதி, அழிவடைந்துள்ளது.
பல்வேறு தடைகளையும் உடைத்துக்கொண்டு கடலரிப்பு தற்போது திருக்கோவில் பிரதேசத்தை நோக்கி நகர்ந்துள்ளமை மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டிருந்த பல கட்டடங்கள், கிணறுகள் மற்றும் வாடிகள் கடலரிப்பு காரணமாக கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இந்த பிரதேசங்களில் மீன்பிடி வள்ளங்களை நிறுத்துவதற்கான இடம் மற்றும் தென்னை மரங்கள் என்பன அழிவடைந்துள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் கடற்கரையோரமாக உள்ள திருக்கோவில் பொதுமயானமும் சிதைவடைந்துள்ள நிலையில் சங்கமன்கண்டி முதல் தம்பட்டை வரையிலான சுமார் 40 km கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

