21 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பதுளை கந்தகெட்டிய வீதியை புனரமைக்க அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 76 கோடி ரூபா பணத்தை, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் பணிக்குழு தலைவர் காமினி செனரத் ஆகியோர் மோசடி செய்துள்ளதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.
வீதியை புனரமைக்க அரசாங்கம் ஒதுக்கிய 76 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தில் 15 கோடி ரூபாவுக்கும் மேலான பணம் உண்டியல் முறையில் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த ஊழல் நடவடிக்கையில் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் பணிக்குழு தலைவர் காமினி செனரத் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் சந்த கலங்சூரிய நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

