ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தொகுதி அமைப்பாளர்களை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்தை கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் அந்த கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் உட்பட 13 பேரின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை நீக்குவதற்கு கட்சித் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று தீர்மானித்தார்.
இது குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ இன்று கட்சி முகம் கொடுத்துள்ள நிலை குறித்து தான் கவலைபடுவதாகத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டு மக்களின் உரிமைகளை காப்பதற்காகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், இன்று சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடிபணிந்து செயல்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது என்று குற்றம்சாட்டிய முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, இதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் ஆழமாக சிந்தித்து செயல்படுவது அவசியமென்று தெரிவித்தார்.
இதேவேளை பதவி நீக்கப்பட்டுள்ள அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன கருத்துக்களை தெரிவித்த போது, ஆவணங்கள் முலம் தங்களை நீக்கப்பட்டாலும், மக்களின் மனதில் தாங்கள் நிரந்தரமாக வசித்து வருகின்றதாக தெரிவித்தார்.
கடந்த தேர்தலின் போது, அதிக எண்ணிக்கையான வாக்குகளை பெற்ற சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு மிக பலவீனமான நபர்கள் அதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தோற்கடிக்கும் திட்டத்துடன் சிலர் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் குற்றம்சாட்டினார்.
