மும்மன்ன கிராமத்துக்கு பாதுகாப்பு வழங்குமாறு பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோள்



(AHM-Hussain)
மும்மன்ன கிராமத்துக்கு உடனடியாக விஷேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்குமாறு பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோள்.
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள் மும்மன்ன கிராமத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இன்று புதன்கிழமை மாலை உரையாற்றவுள்ள நிலையில், இது அங்குள்ள முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்பதால் உடனடியாக பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு மும்மன்ன பள்ளிவாசல் நிருவாகம் அரசைக் கேட்டுள்ளது.
பொதுபல சேனா நடாத்தத் திட்டமிட்டுள்ள கூட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு அங்குள்ள மக்கள் வலியுறுத்திய போதிலும் மத சொற்பொழிவை காரணம் காட்டி பொலிஸார் அந்த வேண்டுகோளை நிராகரித்துள்ளனர்.
ஆகவே, மும்மன்ன கிராமத்துக்கு இன்றைய தினம் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பை பெற்றுத் தருமாறு மும்மன்ன மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது கவனத்துக்கு கொண்டு சென்ற போதிலும் இன்றைய தினம் மாலை நடைபெறவுள்ள நிகழ்வை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாமற் போயுள்ளது.
மும்மன்ன முஸ்லிம் கிராமத்தை ஊடறுத்து பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன், கொடிகளும் ஏற்றப்பட்டுள்ளன. இது அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  
நேற்று செவ்வாய்க்கிழமை குளியாபிட்டிய பொலிஸ் நிலையத்தில் இந்த விடயம் தொடர்பாக பேச்சுக்கள் நடைபெற்றன.
இதன்போது மார்க்க சொற்பொழிவைக் காரணம் காட்டி அதை தடைசெய்ய முடியாது என பொலிஸார் தெரிவித்தனர். புதன்கிழமை  காலை முதல் கிரிஉல்ல பொலிஸ் நிலையத்திலிருந்து மூன்று பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆரம்பம் முதல் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து கொள்வதனால் தொடர்ந்து அவர்களை எம்மால் நம்ப முடியாதுள்ளது.
ஆகையினால், மும்மன்ன கிராமத்துக்கு விசேட பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். என பள்ளி நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.