#நா.முத்துக்குமார் : உங்களினை நினைந்து உள்ளம் உருகுதே





(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்) #NaMuthukumar

தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் 41 வயதான நா. முத்துக்குமார் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்.

1975 ஆம் ஆண்டு பிறந்த நா. முத்துகுமாரின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.இயக்குநர் சீமான் அவர்களின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான நா.முத்துக்குமார் இரண்டுமுறை தேசிய விருது பெற்றவர்.

'காதல் கொண்டேன்', 'பிதாமகன்', 'கில்லி', 'கஜினி', 'நந்தா', 'புதுப்பேட்டை', 'காதல்', 'சந்திரமுகி', 'சிவாஜி', 'கற்றது தமிழ்', '7 ஜி ரெயின்போ காலனி', 'காக்காமுட்டை', 'தெறி' உள்ளிட்ட பல படங்களில் நா.முத்துக்குமார் எழுதிய பாடலகள் பெரிய வரவேற்பைப் பெற்றன.

தமிழ் சினிமாவில் 92க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 'தங்கமீன்கள்' படத்தில் இவர் எழுதிய “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” பாடலுக்கும், 'சைவம்' படத்தில் எழுதிய “அழகே அழகே” பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட நா.முத்துக்குமார் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தமிழ் நாட்டின் பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியாரான நா.முத்துகுமார் இன்று உயிரிழந்தார். அவருடைய இறப்பை தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்து இரங்கல்
இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது.
இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு” என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன்.
‘உன் சொந்த ஊர் எது தம்பி’ என்று ஒருமுறை கேட்டேன். “காஞ்சி அண்ணா” என்று சொன்னார். “அண்ணாவே காஞ்சிதான்” என்றேன். கோவையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் என் தலைமையின் கவிதைபாட வந்தார். “சிறந்த வரிகளை அரங்கில் மீட்டு; நீ பிறந்த ஊர் காஞ்சி என்பதைக் காட்டு” என்று அவரை அறிமுகம் செய்தேன். இன்று மரணம் அவர் மெளனத்தையே கவிதையாக்கிவிட்டது. அவர் வாழ்ந்த பெருமையை அவர் பாடிய பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும்.
நா.முத்துக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், கலை உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மரணத்தின் சபையில் நீதி இல்லை என்பதை மறுபடி உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.
தி.மு.க தலைவர் கருணாநிதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்
தமிழ்த் திரை உலகில் தன்னுடைய பாடல்களால் தனி முத்திரை பதித்த கவிஞர் முத்துக்குமார் "தங்கமீன்கள்" என்ற திரைப்படத்தில் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்"" என்ற பாடலுக்காகவும் "சைவம்" திரைப்படத்தில் "அழகே அழகே" என்ற பாடலுக்காகவும் தேசிய விருதுகள் பெற்ற கவிஞர்.






மு.க ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்
'தங்கமீன்கள்' படத்தில் இவர் எழுதிய "ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும்", 'சைவம்' படத்தில் எழுதிய "அழகே அழகே" பாடலுக்கும் தேசிய விருது பெற்ற கவிஞர். 2005-இல் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்று தமிழ் திரையுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த கவிஞர் நா முத்துகுமாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் பேரிழப்பு.உலக நாயகன் கமல் ஹாசன் ட்விட்டரில் இரங்கல்
''நா.முத்துகுமார் 41வது வயதில் இறந்துவிட்டார். தமிழில் உள்ள முக்கிய கவிஞர்களில் அவரும் ஒருவர். சினிமாவுக்கும் பாடல்களை எழுதியுள்ளார். இன்னும், கொஞ்சம் வாழ்ந்திருந்தால் நான் மேலே சொன்ன அறிமுகத்துக்கு தேவை இருந்திருக்காது''

இசையமைப்பாளர் டி.இமான் இரங்கல்

''நா.முத்துகுமாரின் மறைவினால் அதிர்ச்சியில் இருக்கிறேன். பல பாடல்களில் அவருடன் இணைந்துள்ளேன். அழகான மேலும் ஒரு படைப்பாளியை இந்த தருணத்தில் நாம் இழந்துவிட்டோம்''
நா.முத்துக்குமார் - தீபலஷ்மி தம்பதிக்கு ஆதவன் (9) என்ற மகனும், யோகலஷ்மி (8 மாதங்கள்) என்ற மகளும் உள்ளனர்.இவர் பாடலெழுதிய படங்களின் பெயர்கள் கீழே:

இவரது நூல்கள்[தொகு]

  • நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு)
  • கிராமம் நகரம் மாநகரம்
  • பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு)
  • ஆணா ஆவண்ணா
  • என்னை சந்திக்க கனவில் வராதே
  • சில்க் சிட்டி
  • பால காண்டம்
  • குழந்தைகள் நிறைந்த வீடு
  • வேடிக்கை பார்ப்பவன்