அகற்றப்படவேண்டிய மின் கம்பங்கள்



(Suhaib.UL)

அம்பாறை வீதி காபட் வீதியாக மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன் முதற்கட்டமாக பட்டியடிப்பிட்டி பாலத்தடியில் தொடங்கி அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் முடிவடைந்துள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக சாகாம வீதியில் காபட் வேலைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன் மூன்றாம் கட்டமாக பட்டியடிப்பிட்டி பாலத்தடியில் தொடங்கி இறக்காமம் / வரிப்பத்தாஞ்சேனை மினி மறுவாச் சந்தி வரையில் 17 Km கிலோ மீற்றர் தூரம் காபட் வீதியாக மாற்றம் செய்யப்படவிருக்கின்றது.
பட்டியடிப்பிட்டி பாலம் முடிவடையும் இடத்திலிருந்து பாதையின் இரு பக்கமும் 2 அடி என்ற அடிப்படையில் மொத்தத்தில் 4 அடிகள் அகலமாக்கப்படவுள்ளது. அதன் போது 3 ஆம் கட்டைப் பிரதேசத்தில் உள்ள Bent வளைவுப் பிரதேசம் சற்று கூடுதலாக அகலமாக்கப்படுவதற்கு ஏதுவாக அவ்வீதியின் ஓரத்தில் உள்ள மின் கம்பங்கள் புடுங்கப்பட்டு, அவை தூரமாக நடப்பட்டு, அதற்கான வேலைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
பாதை புனரமைப்பின் போது அம்பாறை வீதியும், R D A இற்குச் சொந்தமான பட்டியடிப்பிட்டி தார் வீதியும் T வடிவில் இணைகின்ற இடத்திற்கு பக்கத்தில் உள்ள Bent இன் வளைவில் உள்ள மின் கம்பம் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் புடுங்கி நடப்பட வேண்டியுள்ளது.
அவ்வாறு புடுங்கி நடப்படா விட்டால், அவ்விடத்தில் ஏற்படக் கூடிய வீதி விபத்துக்களைத் தடுப்பது மிகவும் கஷ்டமானதொரு விடயமாக மாறிவிடும். அது மாத்திரமல்ல அம்பாறை வீதியின் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கும் - மணிக்கூட்டு கோபுரச் சந்திக்கும் இடையில் உள்ள சில மின் கம்பங்களும், அம்பாறை வீதியில் பெரிய பள்ளிச் சந்தியில் உள்ள மின் கம்பமும், இவ்வாறு அம்பாறை வீதியில் பல மின் கம்பங்களையும் பிடுங்கி நடப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இது விடயத்தில் அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் அவர்களும், இலங்கை மின்சார சபையின் அம்பாறை மாவட்டப் பொறியியலாளர் அவர்களும், அதனுடன் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும், சம்பந்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்காதவிடத்து, பொது மக்களையும், பாதசாரிகளையும் வீதி விபத்துக்களிலிருந்து பாதுகாக்க முடியாமல் போய்விடும் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.