ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழாவை எதிர்வரும் செப்டம்பர் 03ம் திகதி மிகவும் விமர்சையாக நடத்துவதாக கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறினார்.
இந்த விழா கட்சியின் பலத்தை வௌிக்காட்டுவதாக அமைவதுடன், இதற்காக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் முன்னாள் கட்சி அமைப்பாளர்களுக்கு பதிலாக புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டமையானது, யாரையும் பழிவாங்குவதற்காகவோ புண்படுத்துவதற்காகவோ அல்ல என்றும் கூறினார்.
கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக கட்சியுடன் இணைந்து பணியாற்றும் புதிய முகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியதாகவும், முன்னர் இருந்த பலர் கட்சியின் மூத்தவர்களாக பிரபல்யம் பெற்றிருந்தாலும், கட்சியின் ஒழுங்கமைப்புக்குள் இருக்கவில்லை என்று கூறினார்.
இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் இங்கு உரையாற்றிய அமைச்சர்,
புதிதாக நியமிக்கப்பட்டவர்களும் கட்சியின் ஒழுங்கமைப்புக்குள் செயற்படாவிட்டால், கட்சியின் யாப்புக்கு மீறி செயற்பட்டால் அவர்களுக்கும் இதே நிலமை ஏற்படும் என்றும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறினார்.
எவ்வாறாயினும் கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் கட்சியின் உறுப்புரிமை நீக்கப்படவில்லை என்றும், அனைவருக்கும் ஆண்டு விழாவில் பங்கேற்க முடியும் என்றும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

