#தமிழினி எழுதிய 'ஒரு கூர் வாளின் நிழலில்' கருத்தாடல்





(Siraj Mashoor)

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி எழுதிய 'ஒரு கூர் வாளின் நிழலில்' நூல் குறித்த கலந்துரையாடலொன்று 'புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின்' ஏற்பாட்டில் புதன்கிழமை (17.08.216) மருதமுனையில் இடம்பெற்றது. ரியாஸ் குரானா, ஜெமீல், அம்ரிதா, மிஹாத், அலறி, ஜபார் உட்பட பல நண்பர்கள் உரையாடலில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

தமிழினியின் கணவர் ஜெயன் தேவா (ஜெயக்குமரன்), தோழர் கருணாகரன், சபேசன் போன்றோர் வருகை தந்திருந்தது கலந்துரையாடலைக் கூர்மைப்படுத்தவும், தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் பெரிதும் உதவியது. 

இந்தப் புத்தகம் வெளிவந்த உடனேயே எஸ். எல். எம். ஹனீபாவைத் தொடர்பு கொண்டு, ஜெயக்குமரனிடமிருந்து 10 நூல்களைப் பெற்றுத் தருமாறு வேண்டிக் கொண்டேன். புத்தகங்கள் அஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்றன. பொதியிடப்பட்ட தாள்கள் கிழிக்கப்பட்டு, உள்ளே என்ன இருக்கிறது என்று துழாவிப் பார்த்து விட்டுத்தான் புத்தகம் வீடு வந்து சேர்ந்தது என்பது ஒரு சுவாரசியமான செய்தி. 

உங்கள் மகன் யார், என்ன செய்கிறார் என்று உம்மாவிடம் விசாரித்து விட்டுத்தான் புத்தக் பார்சலைக் கொடுத்திருக்கிறார் தபால்காரர். இந்த விசாரணைகளெல்லாம் இப்போது பழகிப் போன சமாச்சாரம் ஆகி விட்டது. ராஜபக்சவுடைய விசாரணையை விடவா!?

இப்படித்தான் 'முறிந்த பனை' புத்தகத்தை முதலில் வாங்கியபோது, அதற்கு பேப்பரால் உறை போட்டுத் தந்தார் கொழும்பு சவுத் ஏசியன் புத்தகக் கடை விற்பனையாளர். றோட்டால் போகும்போது படையினரின் கெடுபிடியிலிருந்து தப்ப அதுதான் சிறந்த உத்தி என்று சொன்னார். 

பின்னர் ' ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' புத்தகத்தை அடையாளம் சாத்திக்கிடமிருந்து பெற்று இங்கு பலருக்கு கிடைக்கச் செய்தேன். இது போன்ற புத்தகங்களை பகிரங்கமாக விற்க பலரும் பயந்து கொண்டிருந்த காலம் அது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

ராஜனியின் பெயரை எப்போதும் உரத்துச் சொல்லும் 'முறிந்த பனை', கோவிந்தனின் 'புதியதோர் உலகம்', புஷ்பராஜாவின் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' போன்ற நூல்களை வாசித்த அதே தொடரில், அதே அலை வரிசையில் தமிழினியின் 'ஒரு கூர் வாலின் நிழலில்' நூலையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

இந்த எல்லாப் புத்தகங்களும் இன்னமும் நெஞ்சை உலுக்கிக் கொண்டே இருக்கின்றன. இப்படியான நூல்களை வாசிக்கும்போது கண்களிலிருந்து கண்ணீர் கசியாமல் பக்கங்களைக் கடந்து போக முடிவதில்லை. தமிழினியும் அதற்கு விதிவிலக்கில்லை. 

இப்படி ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு மரணித்திருப்பது, தமிழினி எதிர்காலத்திற்கும் வரலாற்றிற்கும் செய்த பெரும் கைமாறு என்று சொல்லத் தோன்றுகிறது. 

இதைத் தமிழினி எழுதவில்லை என்று புலி அபிமானிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாவம், அப்படியே நம்பி விட்டுப் போகட்டும். அப்படி நம்பாவிட்டால் தமிழினியையும் துரோகிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டி வந்து விடுமே என்று அவர்களது உள்மனசு சொல்லக் கூடும். 

தமிழினி எழுதாவிட்டால் என்ன, யாரோ ஒருவர் இதை எழுதித்தான் ஆக வேண்டும். அது வரலாற்றின் தவிர்க்க இயலாத நியதி. இதை எழுதுவதற்கு தமிழினி அளவுக்கு, இறுதிப் போரில் பங்கெடுத்த இன்னொரு சீனியர் புலி எஞ்சியிருக்கிறாரா என்பது சந்தேகமே. இந்தப் புத்தகத்தை எழுதியபோது, 'புலி மன அமைப்பிலிருந்து' தமிழினி வெளியேறி விட்டார் என்பதில் சந்தேகமே இல்லை.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் பிரபாகரனின் பாத்திரமும், அவரைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த பிம்பமும் எவ்வளவு பலவீனமானது, போலியானது என்பதை தமிழினி மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இது ஒன்றும் புதிய விடயம் இல்லைதான். ஏற்கனவே பலரும் திரும்பத் திரும்ப சொன்ன ஒன்றுதான். ஆனால், அதை உள்ளிருந்து சொல்கிறார் தமிழினி. அதுதான் அந்த வித்தியாசம்.

இறுதிப் போர் குறித்தும், புலிகளின் வீழ்ச்சி குறித்தும் கிடைப்பதற்கரிய உள்நிலைப்பட்ட தகவல்கள், நேரடி சம்பவங்கள் பல இந்நூலில் உட்பொதிந்துள்ளன. ஒரு கூர்வாளின் நிழலில் நின்று கொண்டுதான் இது எழுதப்பட்டிருக்கிறது என்பது சர்வ நிச்சயம்.

சுனாமி நிவாரணப் பணிகளுக்காக கிழக்குக்கு வந்தபோதும், கொழும்பில் சிறை இருந்தபோதும் முஸ்லிம், சிங்கள மக்கள் பற்றிய அவரது பார்வைகள், மனப்பதிவுகள் பிரக்ஞய் பூர்வமாக மாறுவதை பதிவு செய்கிறார். நூலின் முதல் பகுதியில் அனுபவ நகர்வுகளும், பிற்பகுதியில் கருத்து நிலை நகர்வுகளும் தூக்கலாகத் தெரிகிறது. போர், ஈழ அரசியல், தமிழ் சமூகக் கட்டமைப்பு குறித்து, இந்நூல் பேசும் பெண்ணிலைப்பட்ட அனுபவங்கள் அதிகம் கவனிப்புக்குரியவை.

இந்த உரையாடலுக்கு என்னை அழைத்த நண்பர் ரியாஸ் குரானாவுக்கு நன்றிகள். எப்போதோ எழுத வேண்டும் என்றிருந்த குறிப்பை, இந்த அளவிலாவது பதிவு செய்யக் கிடைத்ததில் சற்று ஆறுதல்தான். 

இது நூல் பற்றிய ஒரு அறிமுகக் குறிப்பு மட்டுமே. ஒரு திறந்த மனதோடு தமிழினி விரிந்து நிற்கிறார். அவர் தொடர்ந்தும் வரலாற்றுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். இந்த உரையாடல் முற்றுப் பெறுவதில்லை. அது தொடர்கிறது. 

இன்னும் ஒரு பத்தாண்டுக்குப் பின்னர் இந்த நூல் அதிகம் பெறுமதி வாய்ந்ததாய்க் கணிக்கப்படக் கூடும்.

இறுதிப்போர்க் காலத்தில் பிரபாகரனின் நிலை பற்றி நூலில் எழுதப்பட்டுள்ள ஒரு குறிப்பு வருமாறு: 

"அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடைய மெய்ப்பாதுகாவலாக இருந்து, அவருடைய மரணத்தின் பின்னர், ஒரு திறமை மிக்க தாக்குதல் போராளியாக உருவாகியிருந்த ஈழப்பிரியன் கிளிநொச்சியில் என்னை இறுதியாக சந்தித்தபோது, தலைவர் தன்னிடம் குறிப்பிட்ட ஒரு விடயத்தை எனக்குச் சொன்னார் : 

"எல்லாரும் என்னுடைய கையில்தான் எல்லாம் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். என்னட்ட ஒண்டுமில்லை. என்ர கை வெறுங்கை' என்று தலைவர் தனது கையை விரித்துக் காட்டியதாக ஈழப்பிரியன் தனது கைகளை விரித்துக் காட்டினார். 'அண்ணையே இப்படிச் சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும் ?'

தன் பார்வை மாற்றத்தை , சுய விமர்சனத்தை, குரலை தமிழினி இப்படி எழுதுகிறார்: 
"ஆயுதம் தமிழீழத்தைப் பெருத்த தரும் என்கிறதான கனவு உண்மையாகவே உடைந்து நொறுங்கிய சம்பவங்கள், ஒன்றன் பின் ஒன்றாக நிகழாத தொடங்கின."

"மக்களைப் பணயமாக வைத்துத்தான் மக்களுக்காகப் போராடுவதா?அப்படியானால் இது யாரைப் பாதுகாப்பதற்கான போர்? என்ற கேள்விகளுக்கான பதில் பகிரங்கமாக கண் முன்னால் எழுந்து நின்றது."