பிரசாந்தனுக்கு பிணை



கொலை குற்றச்சாட்டின் பேரில் 10 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் செயலாளரான பி. பிரசாந்தனை பிணையில் செல்ல, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2008-ஆம் அண்டு ஆரயைம்பதி பிரதேசத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக, இவரும், இவரது சகோதரரான ஹரன் என்பவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ஆம் தேதியன்று குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரும் தங்களை பிணையில் செல்ல அனுமதி கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்
இந்த மனுவை பரிசீலனைக்கு பின் ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்றம், தலா ரூபாய் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூபாய் 10 லட்சம் பெறுமதியுடைய இரு ஆட்பிணையிலும் செல்ல அனுமதி வழங்கியது.
திங்கள், வியாழன் ஆகிய வார நாட்களில், காத்தான்குடி போலீஸ் நிலையத்தில் நண்பகல் 12 மணிக்கு முன்னதாக ஆஜராகி கையெப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையும் அந்த பிணை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது
2008-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ஆம் தேதியன்று சந்தேக நபர்களின் சொந்த கிராமமான ஆரையம்பதியில் ''தமிழ்நாடு'' என அழைக்கப்படும் ஆசிரியரான கி.மனோகரன் அவரது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உறவு முறை பெண்ணொருவரும் இச்சம்பவத்தில் பலியானார்.
இச்சம்பவம் நடைபெற்று 7 வருடங்கள் கடந்த நிலையில், சம்பவத்தை நேரில் கண்டதாக கூறப்படும் கி.மனோகரனின் சகோதரியொருவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குற்றப்புலனாய்வு துறையினரிடம் செய்திருந்த முறைப்பாட்டில் இந்த இருவர் மீதும் சந்தேகம் வெளியிட்டார்.
காத்தான்குடி போலீஸ் குற்றப்புலனாய்வு துறையினரால் இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரனைகளை அடுத்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பி. பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரரான ஹரன் ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
இவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனும், மற்றுமோர் கொலை தொடர்பாக 10 மாதங்கள் கடந்தும் மட்டக்களப்பு சிறையில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்புடைய சந்தேக நபரான இவரது விளக்கமறியல் மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் ஏற்கெனவே வரும் 7-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இவரும் தன்னை பிணையில் செல்ல அனுமதி கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.