(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்ட விவசாய காரியாலயத்தின் செயல்பாடுகள் டயகம பிரதேச விவசாயிகளுக்கு கிடைப்பதில்லையென தெரிவித்து 28.08.2016 அன்று காலை 10 மணிமுதல் 12 மணிவரை டயகம பகுதியில் விவசாய காணியில் வைத்து 50 இற்கு மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நுவரெலியா மற்றும் லிந்துலை ஆகிய இடங்களில் விவசாய காரியாலயங்கள் இயங்கி வருகின்றது.
இக்காரியாலயங்கள் மூலம் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கீழ் நிர்வாகம் செய்யும் ஒவ்வொரு கிராம அதிகாரியின் பிரிவில் விவசாய சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட விவசாய காரியாலயத்தின் மூலம் வழங்கப்படும் விதை உரம் மற்றும் விவசாய உபகரணங்கள் நிவாரண உதவிகள் அனைத்தும் கிராம விவசாய சங்கத்தின் ஊடாக பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.
ஆனால் டயகம பிரதேசத்தில் விவசாய சங்கம் இயங்குகின்ற போதிலும் மாவட்ட விவசாய காரியாலயத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் இதுவரை தமக்கு கிடைப்பதில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் அதிகமான குடும்பங்களை சேர்ந்தவர்கள் விவசாய நடவடிக்கைகளை மாத்திரம் வாழ்வாதாரமாக நம்பி வாழ்கின்றனர்.
மழைக்காலங்களில் விவசாய காணிகள் வெள்ளத்தினால் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் போது இவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் போது எவ்வித உதவிகளும் கிடைக்கப்படுவதில்லை. இதனால் இவர்கள் பல இடர்களை சந்திப்பதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.
விவசாய சங்கத்தின் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதில்லையெனவும் சங்கத்தில் பல மோசடிகள் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் விசனம் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் டயகம பிரதேச விவசாயிகளுக்கு உரிய உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கபடும் என இவர்கள் ஆர்பாட்டத்தின் போது தெரிவித்தனர்.

