காணாமல் போனவர்கள் செயலணியில் தமிழர்களும், முஸ்லிம்களும் இடம்பெற கோரிக்கை



இலங்கையில் அரசினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனவர்களுக்கான செயலணியில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியிடம் முஸ்லிம் சிவில் அமைப்புகளினால் யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் ஓன்றான ஏறாவுரில், இன்று (புதன்கிழமை) நடைப்பெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வின் போது, இந்த யோசனை ஏறாவுர் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் முன் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த அமர்வு நடைபெற்று முடிந்த நிலையில், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்ததாக முஸ்லிம் சிவில் அமைப்புகளினால் இந்த செயலணி மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.
ஏறாவுர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இன்றைய அமர்வின் போது, குறிப்பாக முஸ்லிம்கள் தமது காணி உரிமை , மீள் குடியேற்றம், இழப்பீடுகள் , ஆட்கள் காணாமல் போனமை போன்ற விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளை முன் வைத்தனர்.
ஏறாவுர் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் முன் வைக்கப்பட்ட யோசனைகளில் சில:-
'' வட மாகாணத்தை போன்று கிழக்கு மாகாணத்திலும், தமிழர்களும், முஸ்லிம்களும் காணாமல் போயுள்ள நிலையில் காணாமல் போனவர்கள் விவகாரம் வட மாகாணத்தை மட்டும் மையப்படுத்தி முன்னெடுக்கப்பட கூடாது.
காணாமல் போனவர்களுக்கான செயலணியில் கிழக்கு மாகாணத்தை வாழ்விடமாக கொண்ட தமிழரும், முஸ்லிமும் இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்
யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் ஆயுதம் ஏந்திய தரப்பினரால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன ரீதியான செயல்பாடுகளின் உண்மை நிலை கண்டறிப்பட்டு நீதி கிடைக்க வேண்டும். பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இழப்பீடு கிடைக்க வேண்டும்.'' என வலியுறுத்தி கூறப்பட்டுள்ளன.
நாட்டின் இறைமைக்கு பாதிப்பு இல்லாத பக்க சார்பற்ற நம்பகத்தன்மையான நீதி விசாரனையே முஸ்லிம்கள் விரும்புவதாக ஏறாவுர் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள யோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"உள்நாட்டு பொறிமுறையிலான விசாரனை நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறப்பு வழக்கு தொடுரர் குழாமில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழரும், முஸ்லிமும் அதில் இடம் பெற வேண்டும்.
சர்வதேச விசாரணை அல்லது சர்வதேச கண்காணிப்புடனான விசாரனையாக அது அமையும் பட்சத்தில் இலங்கை முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளக கூடிய முஸ்லிம் நாடுகளுக்கும் அதில் இடமளிக்கப்பட வேண்டும் '' என்றும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியிடம் சமர்பிக்கப்பட்ட மனுவில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.